video conferencingமுதல்- அமைச்சர் ஜெயலலிதா பதவி ஏற்ற அதே நாளில் 20 கிலோ இலவச அரிசி, ஏழை பெண்களுக்கு திருமண உதவியுடன் 4 கிராம் தங்கம், ஆதரவற்ற முதியவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவி என்பது உள்பட 7 திட்டங்களை உடனே செயல்படுத்த கையெழுத்திட்டார்.
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் 1 1/2 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். அரசு திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் அரசு துறைகள் சிறப்பாக செயல் படுவதற்கும் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
தற்போது தமிழ்நாட்டில் 62 அரசு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மகளிர் கல்லூரிகள் 18. இது தவிர பல்வேறு புதிய கல்லூரிகள் தேவை என்று அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து புதிதாக 9 புதிய கலை-அறிவியல் கல்லூரிகளை திறக்க முதல்- அமைச்சர் ஜெயலலிதா அனுமதி வழங்கினார்.
அதன்படி சென்னை பல்கலைக்கழகம் சார்பில் நெம்மேலி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் நாகலாபுரம், பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் அரூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், மதுரைப் பல்கலைக்கழகம் சார்பில் திருச்சுழி. பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் ஸ்ரீரங்கம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய 9 புதிய கல்லூரிகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது
இந்த 9 புதிய கலை- அறிவியல் கல்லூரிகளின் திறப்பு விழா இன்று எளிமையாக நடந்தது. முதல்- அமைச்சர் ஜெயலலிதா சென்னை கோட்டையில் இருந்தபடியே “வீடியோ கான்பரன்சிங்” மூலம் 9 கல்லூரிகளையும் தொடங்கி வைத்தார்.
இதில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக அல்லாமல், அந்தந்த பல்கலைக்கழகங்களின் உறுப்பு கல்லூரிகளாக செயல்படும். இந்த கல்லூரிகளுக்கான செலவுகளை அந்தந்த பல்கலைக்கழகங்களே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள் தவிர ஸ்ரீரங்கம் தொகுதி புதிய பஸ் வழித் தடங்களையும் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டியில் கட்டப்பட்டுள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபமும் திறந்து வைக்கப்பட்டது.
இது தவிர சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சென்னை நிருபர்கள் சங்க புதிய கட்டிடம், சென்னை எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள புதிய மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றையும் தலைமைச்செயலகத்தில் இருந்து “வீடியோ கான்பரன்சிங்” மூலம் முதல்- அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
- Recent News
- Comments
Face Book
Advertisement
Daily Video
Live Scores

