அட்லாண்டிஸ் பூமிக்கு திரும்பியது.

அமெரிக்காவிடம் இயங்கு நிலையில் கைவசமிருந்த கடைசி விண்கலமான அட்லாண்டிஸும், தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று பூமிக்கு வந்திறங்கியுள்ளது.
கடந்த ஜூலை 8ம் திகதி தனது இறுதி விண்வெளி பயணத்திற்காக புறப்பட்ட அட்லாண்டிஸ் விண்கலம், விண்வெளியில் உள்ள சர்வதேச ஆராய்ச்சி நிலையத்திற்கு தேவையான உபகரணங்களையும், நான்கு விண்வெளி வீரர்களையும் சுமந்து சென்றது. அட்லாண்டிஸின் கடைசி விண்வெளி பயணம் இது என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் புறப்படும் இடத்துக்கு ஒன்று கூடி வழியனுப்பி வைத்தனர். இதில் 4 விண்வெளி வீரர்கள் பயணித்தனர்.
நேற்று முன் தினம், செவ்வாய்க்கிழமை,  விண்வெளி நிலையத்திலிருந்து தேவையற்ற பொருட்களை எடுத்துக்கொண்டு பூமிக்கு திரும்ப தயாரானது. அப்போது விண்வெளி ஆய்வு மையத்தில் ஒரு கொடி நாட்டப்பட்டது.  'இந்த கொடியை ஏதேனும் ஒரு விண்வெளி வீரர் பூமிக்கு கொண்டு வருவார். விண்கல பயணம் முடிவடையாது தொடரட்டும்' என விண்கலத்தின் கட்டளை அதிகாரி கிரிஸ் பெர்குசன் தெரிவித்தார்.

இதையடுத்து அட்லாண்டிஸில் பயணித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள், சர்வதேச விண்வெளி நிலைத்திலிருந்தும், இதர விண்வெளி வீரர்களிடமிருந்தும் பிரியாவிடை பெற்றனர்.

இன்று மதியம் இந்திய நேரப்படி 02.27 க்கு வெற்றிகரமாக பூமியை வந்தடைந்த விண்கலம், கேப் கெனரவல் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது.

இறுதிப்பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய அட்லாண்டிஸை வரவேற்பதற்காக, நிகழ்விடத்துக்கு நூற்றுக்கணக்கான மக்களும் சர்வதேச விண்வெளி வீரர்களும் கூடினர்.

இவ்விண்கலத்தின் கட்டளை தளபதியாக பணியாற்றிய விண்வெளி வீரர் கிரிஸ் பெர்குசன் கருத்து தெரிவிக்கையில், எம்மை போன்ற வீரர்களுக்கு உற்ற தோழனாக, எம்முடனேயே பயணித்த அட்லாண்டிஸ் இப்போது ஓய்வு பெறபோவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வெற்றி பயணங்களில் இதன் ஒத்துழைப்பு அளப்பரியது என கூறினார்.

அமெரிக்க விண்வெளி ஆராய்சி மையமான நாசா, விண்வெளிக்கு வீரர்களையும், தொழில்நுட்ப மற்றும் உணவு பொருள்களை கொண்டு செல்வதற்கு சேலஞ்சர், கொலம்பியா, டிஸ்கவரி, அட்லாண்டிஸ், எண்டவர் ஆகிய விண்கலங்களை 1980ம் ஆண்டிலிருந்து பயன்படுத்த தொடங்கியது.

விமான வடிவில் இவை இருப்பதாக் சுமார் 7 விண்வெளி வீரர்கள் இவற்றில் பயணிக்கலாம்.

விண்வெளிக்கு தனது முதல் பயணத்தை கொலம்பியா விண்கலம் 1981ம் ஆண்டு தொடங்கியது. அதன் பின் ஏனைய விண்கலங்களும் விண்ணுக்கு சென்று வர தொடங்கின.

ஆனால் 1986ம் ஆண்டு சேலஞ்சர் விண்கலமும், 2003ம் ஆண்டு கொலம்பியா விண்கலமும், விபத்தில் வெடித்து சிதறின. மீதமிருந்த, டிஸ்கவரி, எண்டவர் விண்கலங்கள் தனக்களது கடைசி பயணங்களை முடித்துவிட்டு அருங்காட்சியத்துக்கு செல்ல தயாராகிவிட்டன.

மீதமாக சேவையிலிருந்து அட்லாண்டிஸ் விண்கலம் மட்டுமே.

தற்போது அவ்விண்கலமும் தனது 30 ஆண்டுகால தசாப்தத்தை இப்பயணத்துடன் முடித்து கொண்டுள்ளது. அடுத்த விண்வெளி பயணங்களுக்கு கேப்சூல் வகை புதிய விண்கலங்களை தயாரிக்க நாசா திட்டமிட்டுள்ளது.

இவற்றை விண்வெளி பயணங்களுக்கான பாவணைக்கு கொண்டு வருவதன் மூலம் செலவை குறைக்க முடியும் என்பதுடன், பாதுகாப்பையும் மேம்படுத்த முடியும்.

எனினும், இவற்றை தயாரிக்க 3 முதல் 5 ஆண்டு காலம் தேவைப்படுவதால், அதுவரை ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட் மூலம் தேவையான விண்வெளி பயணங்களை மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
Tags: , , ,