ஓட்டமாவடியில் பதட்டம்; கிரீஸ் மனிதர்கள் தொல்லை (படங்கள் இணைப்பு)

ஓட்டமாவடியில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் நான்கு பொதுமக்களும் இரு பொலிஸாரும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.


இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

மர்ம மனிதர்கள், கிறீஸ் பூதங்கள் குறித்து மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் வாழைச்சேனைபொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி பிரதேசத்தில் வீதியில் இன்று காலை சென்றுகொண்டிருந்த 31வயதான பெண்ணொருவரை ஒருவர், தாக்கியதாக கூறப்படும் ஒருவரை பொதுமக்கள் துரத்திப் பிடித்துதாக்கினர். காயமடைந்த நிலையில் அந்நபரை வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

இந்நிலையில் சந்தேகநபரை பொலிஸார் விடுதலை செய்துவிட்டனர் என்று பரவிய வதந்தியை அடுத்து ஓட்டமாவடி பிரதேசத்தில் பொலிஸார் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. 

பொதுமக்களை கலைப்பதற்காக பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இம்மோதல்களில் காயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் நான்கு பொதுமக்களும் மீராவோடை, வாழைச்சேனை வைத்தியாசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டு. போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதேநேரம் பெண்ணை தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபர் தொடர்ந்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சம்பவத்தினை தொடர்ந்து ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன் படையினர் வரவழைக்கப்பட்டு மேலதிக பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரின் கமராவும் அப்பகுதியில் இருந்தவர்களினால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் ஊடகவியலாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Tags: