அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ”டுவென்டி 20” போட்டியில், இலங்கை அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கையின் தில்ஷான், அதிரடியாக சதம் கடந்து அசத்தினார். இலங்கை சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட ”டுவென்டி 20” தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டி நேற்று பல்லேகெலேயில் நடந்தது. ”டொஸ்” வென்ற அவுஸ்திரேலிய கப்டன் காமிரான் ஒயிட், களத்தடுப்பு தெரிவு செய்தார்.
இலங்கை அணிக்கு துவக்கத்தில் சண்டிமால், ஜெயவர்தனா தலா 11 ரன்கள் எடுத்தனர். சங்ககார 30 ரன்னுக்கு அவுட்டானார். மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய கப்டன் தில்ஷான், ஹாஸ்டிங்ஸ் ஓவரில் 4 பவுண்டரிகள் அடித்தார். தொடர்ந்து அசத்திய இவர், வாட்சன், ஜான்சன் ஓவர்களில் தலா 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்து, ”டுவென்டி 20” அரங்கில் முதல் சதம் கடந்தார்.
இலங்கை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. தில்ஷான் (104), ஜீவன் மெண்டிஸ் (29) அவுட்டாகாமல் இருந்தனர். கடின இலக்கை விரட்டிய அவுஸ்திரேலிய அணிக்கு வாட்சன் (10), மார்ஷ் (4), ஹசி (6), ஒயிட் (7) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர்.
ஸ்மித் 12 ரன்கள் எடுத்தார். ஹாடின் (7) நிலைக்கவில்லை. வார்னர் அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் ஜான்சன் (22*), ஹாஸ்டிங்ஸ் (14*) போராடிய போதும், அது வெற்றிக்கு போதவில்லை.
அவுஸ்திரேலிய அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்து, 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து, ”டுவென்டி 20” தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது ”டுவென்டி 20” நாளை நடக்கிறது.
- Recent News
- Comments
Face Book
Advertisement
Daily Video
Live Scores
