ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த நாட்டில்; சிறுபான்மை கட்சியாகவே கருதப்படுகிறது. மலையகத்திலும் வட கிழக்கிலும் இன்னும் பல சிறுபான்மை கட்சிகள் இருக்கின்றன. அவை தனது பிரதேச எல்லைக்கு வெளியே சென்று தேர்தலில் போட்டியிடுவதில்லை.
ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தனது அதிகார பிரதேசத்திற்கு வெளியே நாடு முழுதும் சென்று போட்டியிட்டு தனது சக்தியை காண்பித்துள்ளது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
நேற்று அக்குறணை மர்ஹபா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 13 பேரின் சத்திய பிரமாணம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாலது, தெற்கே வெலிகமையிலிருந்து வடக்கே பூநகரி வரைக்கும், மேற்கே கல்பிட்டியில் இருந்து கிழக்கில் காரைத்தீவு வரைக்கும் நாங்கள் போட்டியிட்டுள்ளோம்.
ஏனைய சிறுபான்மைக் கட்சிகளைப் போல் ஒரு பிரதேசத்திற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படாது தனது அதிகார எல்லையான அம்பாறைக்கு அப்பாலும் சென்று வெற்றி ஈட்டி சாதனை படைத்துள்ளது. வட கிழக்கு மாகாணங்களில் அரசு தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தலை முன்னெடுப்பதாக எழுந்த குற்றச் சாட்டுக்களை முடிவடைந்த தேர்தல் முடிவுகள் பொய்யாக்கியுள்ளன.
முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி அவர்களுக்கு தனது நன்றியை தெரிவிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் அவர் அதிகாரத்திலுள்ள தனது கட்சியுடன் இணையாது தனித்துப் போட்டியிட அவர் எமக்கு அனுமதி வழங்கினார் என தெரிவித்தார்.
- Recent News
- Comments
Face Book
Advertisement
Daily Video
Live Scores
