அமெரிக்க கடன் நெருக்கடி தீர்வுக்கான மசோதா பிரதிநிதிகள் சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.மசோதாவின் பரிந்துரைகள்படி அமெரிக்க கடன் உச்சவரம்பு தொகை 14.3 டிரில்லியன் டொலரில் இருந்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு மேலும் 2.4 டிரில்லியன் டொலர் அதிகரிக்கப்படும்.
நாட்டின் செலவுகளில் அடுத்து 10 ஆண்டுகளில் 2.1 டிரில்லியன் டொலர் குறைக்கப்படும். இதன் மூலம் நாடு மேலும் கடன் நெருக்கடியில் சிக்காமல் தவிர்க்க வழிவகுக்கப்படும்.
கடன் நெருக்கடிக்கான தீர்வு கடந்த 31ம் திகதி இரவு எட்டப்பட்டதாக அதிபர் ஒபாமா அறிவித்தார். அதைத் தொடர்ந்து இரு கட்சிகளும் இணைந்து தாங்கள் முன்வைத்த பரிந்துரைகளை மசோதாவாக உருவாக்கின.
மசோதா நிறைவேற்றம்: இதையடுத்து பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் அம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆளும் ஜனநாயகக் கட்சியினரில் 95 பேர் மசோதாவை ஆதரித்தும், 95 பேர் எதிர்த்தும் ஓட்டளித்தனர்.
எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினரில் 174 பேர் ஆதரித்தும், 66 பேர் எதிர்த்தும் ஓட்டளித்தனர். மொத்தத்தில் மசோதாவுக்கு ஆதரவாக 269 ஓட்டுகளும், எதிராக 161 ஓட்டுகளும் விழுந்தன.
"மசோதாவில் சில பரிந்துரைகள் மீதான கருத்து வேறுபாடுகளால், குடியரசுக் கட்சியினர் நிச்சயம் எதிர்ப்பர், அதனால் பிரதிநிதிகள் சபையில் மசோதா நிறைவேறாது, கடன் நெருக்கடிக்கான தீர்வு அவ்வளவு விரைவில் காணப்படாது" என பல தகவல்கள் கடந்த 31ம் திகதி முதல் உலவின. ஆனால் பிரதிநிதிகள் சபை அத்தகவல்களை பொய்யாக்கி மசோதாவுக்கு ஆதரவளித்துள்ளது.
புதிய மசோதாவின் முக்கிய அம்சங்கள்: அமெரிக்காவின் கடன் உச்சவரம்பு அடுத்த 10 ஆண்டுகளுக்கு 2.1 டிரில்லியன் டொலர் அளவிற்கு உயர்த்தப்படும். அரசின் அன்றாடச் செலவுகள், ராணுவ சம்பளம், வாங்கிய கடனுக்கு வட்டி, மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு போன்றவற்றுக்காக முதற்கட்டமாக 400 பில்லியன் டொலர் தொகை கடன் உச்சவரம்பில் உயர்த்தப்படும்.
இரண்டாவதாக பிப்ரவரிக்குள் மேலும் 500 பில்லியன் டொலர் அதிகரிக்கப்படும். சட்டப்படி எதிர்க்கட்சியினர் இந்த இரண்டாவது அதிகரிப்பை எதிர்த்து காங்கிரசில் ஓட்டளிப்பர்.
ஆனால் அதை அதிபர் தனது மறுப்பாணை(வீட்டோ) மூலம் நிராகரிப்பார். இந்த நடவடிக்கை ஒரு கண்துடைப்புக்காக மேற்கொள்ளப்படும். இதையடுத்து இந்தாண்டு அக்டோபர் மாதம் அடுத்த 10 ஆண்டுகளுக்கான முதற்கட்ட 917 பில்லியன் டொலர் செலவுக் குறைப்புத் திட்டம் அமலுக்கு வரும். இதில் ராணுவச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் 350 பில்லியன் டொலர் சேமிக்கப்படும்.
இதற்கிடையில் நவம்பரில் இரு கட்சியினரும் அடங்கிய 12 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழு 2013ல் இருந்து மேலும் 1.5 டிரில்லியன் டொலர் செலவுகளைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும்.
அதேநேரம் அந்தப் பரிந்துரைகளில் வரி உயர்வு இருக்காது. வரி சீர்திருத்தம் இருக்கலாம். டிசம்பர் 23ம் திகதி பரிந்துரைகள் மீது எவ்வித தாமதமும், திருத்தமும் இன்றி காங்கிரஸ் ஓட்டளிக்க வேண்டும்.
பரிந்துரைகளை காங்கிரஸ் நிராகரித்தால் 2012 ஜனவரி 15ம் திகதி முதல் முதியோருக்கான நலவாழ்வு காப்பீட்டு திட்டம், உள்நாட்டுப் பாதுகாப்பு போன்றவற்றில் தன்னிச்சையாக செலவுகள் குறைக்கப்படும். இறுதியாக செலவுகள் வருமானத்தை விட அதிகரிக்காமல் இருக்க வழி செய்யும் சீரான பட்ஜெட்டுக்கான அரசியல் சாசன திருத்தம், காங்கிரசில் ஓட்டளிப்பு மூலம் இந்தாண்டின் இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.
நிறைவேற்றப்படும் பட்சத்தில் அதிபர் ஒபாமா மேலும் 1.5 டிரில்லியன் டொலர் கடன் உச்சவரம்பை அதிகரிக்க காங்கிரசிடம் கோருவார். நிறைவேற்றப்படாத பட்சத்தில் உச்சவரம்பை 1.2 டிரில்லியன் டொலராக குறைத்துக் கேட்பார்.
பென்டகனுக்கு பாதிப்பு: தற்போதைய ஒப்பந்தத்தால் அமெரிக்க ராணுவ மையமான பென்டகன் பெரிதும் பாதிக்கப்படும். அடுத்த பத்தாண்டுகளில் அதற்கான நிதி ஒதுக்கீட்டில் 550 பில்லியன் டொலர் குறைக்கப்படும். இந்தாண்டில் மட்டும் பென்டகனுக்கு 689 பில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2012ல் 684 பில்லியன் டொலராக குறைக்கப்படும்.