தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்லுகின்ற இலங்கை அகதிகளின் எண்ணிக்கை மெதுவாக அதிகரித்து வருகின்றது. தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையிலான கப்பல் சேவை அண்மையில் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த ஒன்றரை வருடங்களில் இலங்கைக்கு திரும்பிச் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை உயர் ஸ்தானிகராலயத்தின் இலங்கைப் பிரதிநிதி மிச்சேல் ஸ்வாக் கூறினார்.
20 வருட கால இடைவெளியின் பின்னர் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையிலான கப்பல் சேவை கடந்த ஜுன் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கப்பல் சேவை மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாத்துறை திடப்படுத்தப்படுமென்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். நடுத்தரமான இந்திய வர்த்தகர்கள் அதிலும் குறிப்பாக புடவைத் தொழில் வர்த்தகர்கள் இந்த கப்பல் சேவை மூலம் பயனடைவார்களெனத் தெரிவிக்கப்படுகிறது.
உலகளவில் 141000 இலங்கை அகதிகள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழ் நாட்டில் உள்ளனர் என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை முகவராலயத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. இந்தியாவிலும் அதற்கு அப்பாலுமுள்ள 2800 இலங்கை அகதிகள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப விருப்பமாகவுள்ளனர் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
1980களில் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான யுத்தம் தீவிரமடைந்ததிலிருந்து பெரும் எண்ணிக்கையான இலங்கை அகதிகள் இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர். இருப்பினும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வரும் பகுதிகளில் அகதிகள் மீள்குடியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.