கடினமாக உழைத்து சினிமாவில் ஜெயித்தேன்; விஜய் உருக்கமான பேச்சு

சேலம் மாவட்ட தலைமை இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சேலம் 3 ரோடு அருகில் உள்ள ஜவகர் மில் திடலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விஜய் இயக்க நிறுவன தலைவரும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.


விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு ஏழைகளுக்கு ரூ. 8 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். விஜய் பேசியதாவது:-


சென்னையில் நான் எந்த ஒரு சிறிய காரியம் செய்தாலும் இதுபோல் நீங்கள் அவரவர் ஊரில் செய்து மக்களுக்கு உதவி வருகிறீர்கள். நான்அன்னதானம் செய்தாலும் நீங்களும் அன்னதானம் செய்கிறீர்கள். தங்க மோதிரம் குழந்தைகளுக்கு வழங்கினாலும், நீங்களும் 20, 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போட்டு அழகு பார்க்கிறீர்கள்.


இலங்கை தமிழர்கள் காக்க தந்தி தரவேண்டும் என ஒரு அறிக்கைவிடுத்தது தான், நீங்கள் 25ஆயிரம் தந்தி கொடுத்தீர்கள். திருப்பாச்சி படத்தில் நீ எந்த ஊரு நான் எந்த ஊரு, முகவரி தேவையில்லை என்ற பாடல் பாடி இருப்பேன். நான் படத்தில் பாடவில்லை. இது உண்மைத்தான் என உணர்கிறேன். (இந்த பாடலை விஜய் சிறிது நேரம் பாடினார்).


புரட்சித்தலைவி அம்மா ஜெயிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசையை என் அப்பா மூலம் உங்களுக்கு தெரிவித்தேன். பலரும் பல கட்சிகளில் உள்ளீர்கள். தேர்தல் நேரத்தில் நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீர்கள். நீங்கள் எதையும் பொருட்படுத்தாமல் புரட்சி தலைவி அம்மாவின் வெற்றிக்கு பாடுபட்டீர்கள். அவர் வெற்றியும் பெற்றார்.


உங்களால் தான் நான் வளர்ந்தேன். அதனால் நீங்கள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என விரும்புகிறேன். எனது அப்பா ராமநாதபுரம் அருகே உள்ள சிறிய கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து சினிமாவில் முன்னேறினார். அவரது தாயார் பள்ளி டீச்சர்.


என் தந்தை நினைத்து இருந்தால் ஒரு ஆசிரியராகி இருக்கலாம். ஆனால் அவர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என விரும்பி சென்னை வந்து சாதித்தார். அவர் தமிழ், இந்தி சினிமாவில் சாதித்தார். இயக்குனர் சங்கர் மற்றும் பல நடிகர்கள், நடிகைகளை அவர் உருவாக்கினார்.


என்னையும் சினிமாவில் நடிக்க வைத்தார். நான் ஜெயிக்க முடியுமா? என யோசித்தேன். கடலில் நீந்தி ஜெயிக்க முடியுமா? என நினைத்தால் போதாது. நீந்தி ஜெயிக்க வெறி இருக்க வேண்டும். எனக்கும் தோல்விகள் ஏற்பட்டது. கிண்டல், கேலி செய்தனர். பல தடைகள் ஏற்பட்டது. இதில் துவண்டு போகாமல் தொடர்ந்து உழைத்தேன்.


ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவர் தடுமாறி விழுந்து விட்டால் அப்படியே இருந்து விடக் கூடாது. மீண்டும் எழுந்து முன்பை விட அதிக வேகத்துடன் ஓடவேண்டும். அப்படி செய்தால் வெற்றி பெற முடியும்.


நீங்களும் உழைத்து வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும். இன்றைய போராட்டம் நாளைய வெற்றி. தற்போது நான் நடித்து வரும் வேலாயுதம் முடியும் நிலையில் உள்ளது. நண்பன் படம் நடந்து வருகிறது. விரைவில் வேலாயுதம் ரிலீஸ் ஆகி விடும். படம் பட்டய கிளப்பும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


இவ்வாறு அவர் கூறினார்.
Tags: