கடாபியின் மகன் செய்ப் அல்-இஸ்லாம் கைது

லிபியாவில் கர்னல் கடாபிக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த போராட்டத்தின் உச்சக்கட்டமாக கடாபியின் மகன் செய்ப் அல் இஸ்லாம் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளார்.

இதனை சர்வதேச கிரிமினல் கோர்ட்டின் விசாரணையாளர் அலுவலக பெண் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

லிபியாவின் போராட்டக்காரர்கள் குழுவினர் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பில்,"செய்ப் அல் இஸ்லாமையும் கடாபியின் மூத்த மகன் முகமது அல்- கடாபியையும் கைது செய்து காவலில் வைத்துள்ளோம்" என தெரிவித்தனர். 

செய்ப் மீது சர்வதேச கிரிமினல் கோர்ட் குற்றம் சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. லிபியாவில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடாபிக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போரட்டத்தை ஒடுக்க கர்னல் கடாபி ராணுவ தாக்குதலை நடத்தி வருகிறார். இதில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். 

பொது மக்களை பாதுகாக்க நேட்டோ படைகள் அங்கு மார்ச் மாதம் முதல் முகாமிட்டுள்ளன. அவர்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். தற்போது போராட்டக்காரர்கள் லிபியா தலைநகர் திரிபோலியை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
Tags: