தலைதூக்கியுள்ள நிதி நெருக்கடி கனடாவையும் பாதிக்கலாம்; ஜிம் பிளாகர்தி

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிதிப் பிரச்சனை தலைதூக்கி உள்ளது. இந்த நிதித் தட்டுப்பாடு கனடாவை பாதிக்கலாம் என நிதித்துறை அமைச்சர் ஜிம் பிளாகர்தி எச்சரித்து உள்ளார்.

உலக அளவில் கனடா பொருளாதாரம் வலுவானதாகவே உள்ளது. இருப்பினும் இது குறித்து கனடா நிதியமைச்சர் ஜிம் பிளாகர்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கனடா ஒரு தீவு அல்ல. நாம் அமெரிக்க பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர்களாக இருக்கிறோம்.
உலக பொருளாதார மீட்சி நிலை உடையக் கூடிய நிலையிலேயே உள்ளது. நமது உற்பத்தியில் 3ல் ஒரு பகுதி ஏற்றுமதி அளவிலேயே உள்ளது. உலக அளவில் பொருளாதார நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. இதன் தாக்கம் கனடாவிலும் ஏற்படலாம் என்றார். 

கடந்த சில ஆண்டுகளாக கனடா பொருளாதாரம் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. நமது பட்ஜெட்டும், உலக அளவில் வலிமைமிக்கதாகவே உள்ளது என்றும் பிளாகர்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடன் தர நிர்ணய ஏஜென்சியான ஸ்டாண்டர்டு அண்ட் பவர் அமைப்பு அமெரிக்காவின் கடன் நிலையை 3ஏ என்ற நிலையில் இருந்து ஏஏ பிளஸ் என மோசமான நிலையில் பட்டியலிட்டது. 

1917 ஆம் ஆண்டு உலக நிதி தரப்பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது. தற்போது மிக மோசமான கடன் தரவரிசையை அமெரிக்கா முதல் முறையாக பெற்றுள்ளது. 

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நிதிப் பிரச்சனை குறித்து ஜி-7 மற்றும் ஜி-20 நாடுகளின் நிதித்துறை அமைச்சர்கள் விரைவில் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள்.
Tags: ,